சேலம்:அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய ஏதுவாக, தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என்றும் வறட்சி காலத்தைச் சமாளிக்க மாநில அளவில் பெரும் பாசனத் திட்டக் குழுவையும் அமைக்க வேண்டும் என்றும் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.
ஒருங்கிணைந்த மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி தலைமையில் இன்று (டிச.16) நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, 'தமிழகத்தில் தற்பொழுது நல்ல மழை பெய்தது மகிழ்ச்சி.
ஆனால், பெய்த மழைநீர் சேமிக்க வழியின்றி கடலில் சென்று கலப்பது வேதனை அளிக்கிறது. மழைக்காலத்தில் கிடைக்கும் தண்ணீரை முறையாகச் சேமித்து வைத்தால் மட்டுமே, வறட்சி காலத்தைச் சமாளிக்க முடியும். இதற்காக, மாநில அளவிலும் மாவட்டங்கள் அளவிலும் பெரும் பாசனத் திட்டக் குழு உருவாக்கப்பட வேண்டும்' என்றார்.
காவிரியில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும் - ஜி.கே.மணி 'காவிரி விவகாரத்தில், கர்நாடகம் தமிழகத்தின் உரிமையைத் தட்டிப்பறிக்க முயற்சித்து வருகிறது எனக் குற்றம் சாட்டினார். காவிரியில் 5 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்றும் தென்பெண்ணை, பாலாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழகத்திற்கான இழப்பீடு நிதியை மத்திய அரசு கூடுதலாக உடனடியாக வழங்க வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டார்.
நிர்வாக வசதிக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தமிழகத்தில் உள்ள சேலம், மதுரை, திருச்சி, கோவை, தஞ்சை போன்ற பெரிய மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும். அப்படிப் பிரித்தால் தான் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும்' என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ‘பொறியியல் படித்தால் குடியரசுத் தலைவர் ஆகலாம்’ - அமைச்சர் பொன்முடி