சேலம் இரும்பு உருக்காலையை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியை கைவிட வலியுறுத்தி சேலம் இரும்பு ஆலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து, 37 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் இரும்பாலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது தொழிலாளர்கள் மத்தியில் பேசிய மோகன் குமாரமங்கலம், "சேலத்தின் அடையாளமாகத் திகழும் இரும்பாலையை தனியார் மயமாக்கிட பாஜக அரசு துடிக்கிறது. இரண்டாயிரம் கோடி ரூபாய் கடனுக்காக நாட்டின் நவரத்தினம் என்று சொல்லப்படும் சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார்.