சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலை வாசஸ்தலத்திற்கு, வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்லுவதை கட்டுப்படுத்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் இ-பாஸ் பெற்றுதான் அங்கு செல்ல வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதங்களில் கடைப்பிடிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு ரத்துசெய்தது. இதையொட்டி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஏற்காடு செல்ல படையெடுத்தனர்.
அவர்களை முறையாகப் பரிசோதித்த ஏற்காடு அடிவாரத்திலிருந்த காவல் துறை, இ-பாஸ் பெற்ற நபர்களை மட்டும் செல்ல அனுமதித்தனர். இ-பாஸ் பெறாதவர்களைக் கண்டித்து திருப்பி அனுப்பினர். இதையடுத்து, இ-பாஸ் பெறாத வாகன ஓட்டிகளுக்கும், காவல் துறையினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இ-பாஸ் பெற்றுதான் ஏற்காடு செல்ல வேண்டும் எனச் சேலம் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் அன்பு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினார். நேற்று மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள் ஏற்காடு மலை உச்சிக்கு சென்று உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் நோய்த்தொற்று ஏற்படும் இடர் உள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:ஏற்காடு செல்ல இ-பாஸ் கட்டாயம் : காரணம் இதுதான்!