சேலம் மாவட்டத்திலுள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிலும், மற்ற உயிரியல் பூங்காக்களில் உள்ளது போன்று ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை, மாவட்ட சுற்றுலாத்துறையினர் நேற்று அறிமுகப்படுத்தினர்.
இது தொடர்பாக சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி கூறுகையில், "தமிழ்நாட்டில் வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து உயிரியல் பூங்காக்களை பார்வையிட்டு வருகின்றனர். அதேபோல சேலம் அடுத்த குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிலும், இனி சுற்றுலாப் பயணிகள் பூங்காவிற்கென உள்ள பிரத்யேக இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்து, பார்வையிட்டு மகிழலாம்” எனத் தெரிவித்தார்.
மேலும், ”சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால் அவர்களை மனதில் கொண்டு இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் salemecotourism.com என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்தவுடன் அதற்கான அனுமதி எஸ். எம். எஸ் சுற்றுலாப்பயணிகளின் கைப்பேசிகளுக்கு வரும். அதை வன உயிரியல் பூங்காவின் நுழைவாயிலில் காண்பித்துவிட்டு சென்று பூங்காவை சுற்றிப் பார்க்கலாம்" என்றும் தெரிவித்தார்.
குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிலும் தொடங்கியது ஆன்லைன் முன்பதிவு வசதி ”தற்போது பயணிகளைக் கவரும் வகையில் வன விலங்குகள், பறவைகள் ஆகியவையும் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ளது. சேலத்திலிருந்து குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா செல்லும் சாலையை சீரமைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருப்பதால் விரைவில் மாவட்ட நிர்வாகம் சாலையை சீரமைத்து தரும் என்று எதிர்பார்க்கிறோம்”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சேலத்தில் புதிய இரண்டடுக்கு மேம்பாலம் விரைவில் திறக்கப்படும்!