சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய இரண்டு தாலுகாவிலும் 125 ஏரிகள், குளங்கள் உள்ளன. இந்த ஏரிகள் அனைத்தும் தற்போது வறண்டு போயுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டமும் ஆயிரம் அடியைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள நூறு ஏரிகளை குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் சீரமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி ஓமலூர் அருகேயுள்ள அரங்கனூர் கிராமம் தைலாகவுண்டனூர் ஏரியை சீரமைக்கும் பணிகளை இன்று அலுவலர்கள் தொடங்கினர்.
இதில், ஏரியின் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்பது, மழைநீர் ஏரிக்கு வரும் வகையில் கால்வாய்களை அமைப்பது போன்ற பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏரியை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்றது. மேலும், ஏரியில் உள்ள கரைகளை அகலபடுத்தி உயரமாக்குதல் ஆகிய பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணியில் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், விவசாய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு சீரமைக்கும் பணி செய்து வருகின்றனர். இதுபோல், ஓமலூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் குடிமராமத்து பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மேட்டூர் அணையின் உபரிநீரை குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டுள்ள, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நிரப்ப வேண்டும் என்றும் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் குழாய்கள் வழியாக இந்த ஏரிகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும் என்றும் ஓமலூர், காடையாம்பட்டி வட்டார விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.