தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேட்டூர் அருகே மூதாட்டியை கொன்றுவிட்டு நகை, பணம் கொள்ளை.. மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை! - கிரைம்

Salem old lady murder case: கொளத்தூரில் மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

salem old lady murder case
கொளத்தூரில் வீடு புகுந்து கொள்ளை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 2:21 PM IST

சேலம்: மேட்டூர் அடுத்த கொளத்தூர் ஏழு பரன் காட்டையை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி(65). இவரது மனைவி அத்தாயம்மாள்(60). இவர்களுக்கு பிரகாஷ்(40) என்ற மகனும், மல்லிகா(35) என்ற மகளும் உள்ளனர். மகன், மகள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகிய நிலையில், அவரவர் குடும்பத்தினருடன் தனியாக வசித்து வருகின்றனர்.

இதனை அடுத்து அத்தாயம்மாள், அவரது கணவர் சுப்பிரமணி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.இந்த நிலையில், அத்தாயம்மாள் நேற்று இரவு வீட்டின் வெளியே கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது நள்ளிரவில் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் சிலர், அத்தாயம்மாள் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர்.

பின்னர், அவரது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 10 பவுன் தங்க நகைகளை பறித்து விட்டு, வீட்டிற்குள் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து வீட்டின் உள்ளே இருக்கும் பீரோவையும் உடைத்து உள்ளே இருந்த சுமார் 1 லட்சத்து 10 ஆயிரத்தையும் பணத்தையும் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து, கணவர் சுப்பிரமணி காலையில் எழுந்து வந்து பார்த்தபோது, அவரது மனைவி அத்தாயம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் இது தொடர்பாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையிலான போலீசார் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் இருந்து மோப்பநாய் கொண்டுவரப்பட்டு கொலையாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளின் கைரேகைகளை மாதிரிகளை போலீசார் சேகரித்துள்ளனர். நள்ளிரவில் மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்து நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொலை சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் திட்டமிட்டு அரங்கேறியதா அல்லது எதாவது காரணமா என பல கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி: வேலூரில் விதவிதமாய் தயாராகும் விநாயகர் சிலைகள் - ஓர் சிறப்புப் பார்வை!

ABOUT THE AUTHOR

...view details