சேலம்:பெரியார் பல்கலைக்கழகத்தில் 'பூட்டர்' அறக்கட்டளை அமைத்த முறைகேடு புகாரில், சட்ட விதிகளை கடைபிடிக்காமல் மேலிடத்தின் நிர்ப்பந்தத்தால் துணைவேந்தர் கைது செய்யப்பட்டார் என, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், சட்ட விதிகளை மீறி வர்த்தக ரீதியான நிறுவனத்தை தொடங்கியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் தொடர்புடைய இடங்களில் போலீசார் சோதனை செய்து பல ஆவணங்களை கைப்பற்றியதோடு, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த புகாரில் தொடர்புடைய பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் தலைமறைவாகி உள்ள நிலையில், அவர் உள்பட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள், உள்நோக்கத்துடன் சட்ட விதிகளை மீறி மேலிடத்தின் நிர்பந்தத்தின் காரணமாக பதியப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்!