சேலம்:தமிழ்நாடு அரசின் திடீர் மின் கட்டண உயர்வைக் குறைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் சார்பில், நேற்று (செப். 25) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும், மின் கட்டண உயர்வைக் குறைக்க வலியுறுத்தி தமிழ்நாடு சிறு, குறு தொழில்கள் சங்கத்தின் சார்பில், முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
அதேபோல் சமையல் எண்ணெய் ஆலைகளும், 200க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இது குறித்து, சேலம் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூறுயதாவது, "மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில் வணிகர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:மகளிருக்கு 33% சிறப்பு; திருநங்கைகளுக்கு 2% இடஒதுக்கீடு எப்போது? - திருநங்கை பத்மினி அரசுக்கு கோரிக்கை
இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக அரிசி உற்பத்தி ஆலைகளும் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 13 பெரிய அரிசி ஆலைகளும், 200 க்கும் மேற்பட்ட சிறிய அரிசி ஆலைகளும் உள்ளன. மாவட்டத்தில்200 க்கும் மேற்பட்ட அரிசி உற்பத்தி ஆலைகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
மேலும், இந்த தொழிலை நம்பி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாளொன்றுக்கு ரூ.5 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர். தொடர்ந்து, சிறு, குறுந்தொழில் முனைவோர் கூறுகையில், "தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம் 430 சதவீதமும், பரபரப்பு நேரம் (பீக் ஹவர்) கட்டணம் 25 சதவீதமும் உயர்த்தப்பட்டு உள்ளது. சோலார் மேற்கூரை அமைத்தால் அதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக மின்சாரத் துறையின் இந்த செயலை கண்டித்து சேலத்தில் கருப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் மகளிருக்கான தொழிற்பேட்டையில், தொழில் முனைவோர்கள் மற்றும் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் மேற்கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஒரு நாள் மட்டும் இந்த தொழிற்பேட்டையில் ரூ.4 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது. தமிழக அரசு உயர்த்தி உள்ள இந்த மின் கட்டணம், தங்களது தொழில் துறையை வெகுவாக பாதிக்கும். எனவே, தமிழக அரசு இந்த மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கூறினர்.
இதையும் படிங்க:குன்னூரில் வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை... வியர்க்க வைக்கும் சிசிடிவி காட்சி!