சேலம்:வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். தனியார் பள்ளியில் பயிலும் குழந்தைகளை பள்ளியின் வேன் மற்றும் பேருந்துகள் மூலம் தினமும் கூட்டிக்கொண்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் இன்று (அக்.9), பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பெரிய கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து பள்ளியை நோக்கி, தனியார் பள்ளிக்கு சொந்தமான இரண்டு வேன்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வந்த கொண்டிருந்த போது, ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து, எதிர்பாராத விதமாக பள்ளி வேன்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், இரண்டு பள்ளி வேன்களிலும் பயணித்த ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும், 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். பள்ளி குழந்தைகள் சென்ற வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதை கண்ட அப்பகுதி மக்கள், விரைந்து வந்து படுகாயம் குழந்தைகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாழப்பாடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.