சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள சிறு மலர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று(டிச.16) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு 2ஆயிரத்து 642 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 1.27 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கல்வி முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அமைச்சரவையில் நான் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, பள்ளி மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் பாதுகாப்பாகப் பள்ளிக்கு வருகைதர வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு இடங்களில் பேருந்து வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டது. அதேபோல், பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடத்திற்குச் சென்றுவர ஏதுவாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் 11-ஆம் வகுப்பு பயின்ற 8ஆயிரத்து 852 மாணவர்களுக்கும், 13ஆயிரத்து 127 மாணவிகளுக்கும் என மொத்தம் 21ஆயிரத்து 979 மாணாக்கர்களுக்கு ரூபாய் 10.59 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
தற்பொழுது சேலம் மாவட்டத்தில் 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் 181 பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் 11ஆயிரத்து 551 மாணவர்களுக்கும், 14ஆயிரத்து 648 மாணவிகளுக்கும் என மொத்தம் 26ஆயிரத்து 199 மாணாக்கர்களுக்கு ரூபாய் 12.63 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.