சேலம்அருகே கோரிமேடு பகுதியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தொழிற்பயிற்சி நிலையம் முழுவதும் சுற்றி பார்த்து, வேறு என்ன வசதிகள் தேவை என ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 'தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்குச்சென்று, படிக்கும் இளைஞர்களுக்கு 100 விழுக்காடு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரவேண்டும் என்ற நோக்கத்துடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில் சுமார் 36ஆயிரம் இளைஞர்கள் படித்து வருகிறார்கள். இதுதவிர 25ஆயிரம் இளைஞர்கள் முதல் ஆண்டில் சேர்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டு 63 விழுக்காடு பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக் கூறினோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள 66 தொழிற்பயிற்சி நிலையங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 99 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது.