ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் இளமதி (23). அந்தியூர் அருகே உள்ள கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் செல்வன் (26). இவர்கள் இருவரும் ஒரே கம்பெனியில் பணியாற்றும்போது காதலித்து வந்துள்ளனர். செல்வனும், இளமதியும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலை பெண் வீட்டார் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து இருவரும் கடந்த 9ஆம் தேதி மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரைச் சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழக பிரமுகர் ஈஸ்வரன் முன்னிலையில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களது திருமணம் குறித்த செய்திகளும் புகைப்படங்களும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பேஸ்புக் பக்கத்திலும் வாட்ஸ்அப் மூலமாகவும் செய்திகள் பரவின.
இதனிடையே சாதி மறுப்புத் திருமணத்தை நடத்தி வைத்த திராவிடர் விடுதலைக் கழகத்தினரை, கும்பல் ஒன்று கடுமையாகத் தாக்கியதோடு, இளமதியையும் கடத்திச் சென்றது. இளமதியின் தந்தை பாமகவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. பாமக மற்றும் கொங்கு அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் இளமதியைக் கடத்திச் சென்றதாக கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.