காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணை உள்ளிட்ட பல்வேறு அணைகள் நிரம்பி வழிகின்றன.
இதில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 3 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீர் பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை தொட்டு உள்ளது.
முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விவசாயிகள் முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட பாசன வசதிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்து விட்டார். இதனால் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சுந்தரம் கூறுகையில், மேட்டூர் அணையில் இருந்து குறித்த நேரத்தில் முதலமைச்சர் பழனிசாமி தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார். இது காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பல லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். எனவே விவசாயிகள் சார்பில் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.