சேலம் மாநகராட்சிக்குள்பட்ட 44, 45, 57ஆவது வார்டு களரம்பட்டி, கருங்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக சீரமைக்கப்படாத சாலைகளால் நாளுக்குநாள் அப்பகுதி மக்கள், பள்ளி-கல்லூரி மாணவ மாணவியர் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவருகின்றனர்.
எஸ்.ஆர். பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டபோது தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்துவருவதால் சீரமைக்கப்படாத சாலைகளில் மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுவருகிறது. கடந்த பத்தாண்டுக்கும் மேல் இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக சேலம் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபனுக்கு பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, அவர் இன்று சீரமைக்கப்படாத சாலைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது அவரிடம் அப்பகுதி மக்கள் சாலை வசதி மட்டுமின்றி சாக்கடை வசதி, தெரு விளக்கு வசதி உள்ளிட்ட பிரச்னைகளையும் முன்வைத்தனர்.
மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
"சேலம் மாநகராட்சிக்குள்பட்ட 44, 45, 57ஆவது வார்டு பகுதியான களரம்பட்டி, கருங்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சாலைகளை சுமார் ஒரு லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். தினமும் இங்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. அப்படிப்பட்ட சாலைகளை கடந்த 10 ஆண்டாக மாவட்ட நிர்வாகம் சீரமைக்க முன்வரவில்லை.
அது மட்டுமல்லாமல் இப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிப்படைந்துவருகின்றனர். கடந்தாண்டுகூட டெங்கு காய்ச்சலால் இப்பகுதியைச் சேர்ந்த குழந்தை ஒன்று இறந்துள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தாண்டுகூட இப்பகுதி மக்களில் 30 லிருந்து 40 விழுக்காடு மக்கள் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
எனவே இப்பகுதியில் உள்ள சாலைகள், சுகாதாரப் பணிகள் உள்ளிட்டவை இரண்டு மாத காலத்திற்குள் சரிசெய்யப்படவில்லை என்றால், ஐந்தாயிரம் பேருடன் மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவேன்" என்றார்.
இதையும் படிங்க: டெங்கு நோய்த்தடுப்பு பணியில் நூறுநாள் திட்ட பணியாளர்கள் - மாவட்ட ஆட்சியர்