ஓமலூர் அருகேயுள்ள அமரகுந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேஷ் (44). இவர் தன் மனைவி, குழந்தைகளுடன் மும்பையில் வசித்துவருகிறார். இவர் அங்கு ஓட்டுநர் பணியாற்றிவருகிறார்.
அண்மையில், முருகேஷ் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு தனது குடும்பத்துடன் குடியேறுவதற்காக புதியதாக வீடுகட்டி வருகிறார்.
இந்த நிலையில், தன்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் இன்பம், கிருஷ்ணன், வரதன், கோமதி ஆகியோர் அவ்வப்பொழுது முருகேஷிடம் தகராறு செய்துவந்தனர். இதைத் தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன்பு இவர்களுக்குள் வாய்த் தகராறு முற்றியது.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கோமதி, மும்பையில் வேலைபார்க்கும் தன் மகன் மணியரசனை வரவழைத்து முருகேஷை தாக்க திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி, மும்பையிலிருந்து மணியரசன் இரவோடு இரவாக விமானம் மூலம் அமரகுந்திக்கு வந்துள்ளார். வந்த வேகத்திலேயே, மணியரசன் முருகேஷை மரக்கட்டையால் பயங்கரமாகத் தாக்கியுள்ளார். அவரைத் தடுத்த அவரது மனைவி, பிள்ளைகளையும் மணியரசன் தாக்கியுள்ளார்.
பத்துவீட்டுக்காரரைத் தாக்குவதற்குப் பறந்துவந்த இளைஞர் இந்தக் கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்த முருகேஷ் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து தொளசம்பட்டி காவல் துறையினரிடம் முருகேஷ் புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் மணியரசன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.