கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குறிப்பாக தினக்கூலி வேலை செய்து வந்தவர்கள், வேலைகளுக்குச் செல்ல முடியாமல் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் சேலம் கிச்சிப்பாளையம், குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த, அப்ரோஸ் என்ற தேநீர் கடைத் தொழிலாளி, வறுமை காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு திருமணமாகி ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக பணிக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்து வந்த அப்ரோஸின், கையிலிருந்த பணம் முழுவதும் காலியான நிலையில், உணவிற்காக அலைந்து நாட்களைக் கடத்தி வந்துள்ளார். வறுமையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இன்று அதிகாலை நான்கு மணி அளவில், வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அப்ரோஸ்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், அப்ரோஸின் சடலத்தை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.