சேலம் மாநகர் நெத்திமேடு பகுதியில் 17 வயது சிறுமி நேற்று முன்தினம் (பிப். 17) இரவு சாலையில் வழிதெரியாமல் சுற்றித்திரிந்துள்ளார். அப்போது அந்தச் சிறுமி, சாலையில் சென்ற பொதுமக்களிடம் பெங்களூரு செல்ல பணம் கேட்டுள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டு சேலம் நகர மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமி பெங்களூருவைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகள் என்பது தெரியவந்தது.
மேலும், சிறுமியின் தந்தை, சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள அவரது சகோதரர் வீட்டில் தங்கவைத்துள்ளார். அங்கு சிறுமியின் பெரியப்பா திட்டியதாகத் தெரிகிறது. இதனால், கோபமடைந்த சிறுமி வீட்டைவிட்டு வெளியேறினார்.