கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் கள் நல்லசாமி பேட்டி சேலம்:2024, ஜனவரி 1ஆம் தேதி முதல் 'கள்' இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார். மேலும், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றியம் பிள்ளையார்குளம் கிராம சபை கூட்டத்தில் கேள்வியெழுப்பிய விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியை பிணையில் வெளிவர முடியாதவாறு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கள் நல்லசாமி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலத்தில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி இன்று (அக்.6) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், 'தமிழ்நாடு மரவள்ளி சாகுபடியிலும், ஜவ்வரிசி தொழிலும் முதலிடத்தில் உள்ளது. சேலம், நாமக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு மாவட்டங்களில் 300-க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி ஆலைகள் உள்ளன. நடப்பு ஆண்டில் 1 டன் மரவள்ளி கிழங்கு ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. கலப்படத்தைக் கட்டுப்படுத்தி இருந்தால் ரூ.20 ஆயிரமாக விலை இருந்திருக்கும்' என குற்றம்சாட்டினார்.
ஜவ்வரிசி கலப்படம் செய்வோர் மீது சேலத்தில் உள்ள சேகோசர்வ் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு சட்டப்படியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். காவிரியில் தணணீர் தராததால் பயிர்கள் வாடியதைத் தொடர்ந்து டெல்டா விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு தரப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏன் இந்த நிலை வந்தது என அரசு யோசித்திட வேண்டும்' என்று கேள்வியெழுப்பினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், 'காவிரி தண்ணீரைப் பெற (cauvery water dispute) நடத்தப்பட்ட 28 ஆண்டு கால சட்டப்போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. மாறாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி ஆகி ஓடிவரும் காவிரி ஆற்றின் வடிகாலாக்க திட்டமிட்டு ஆக்கப்பட்டுள்ளது. தண்ணீரை தேக்கினால் கர்நாடக அணைகள் உடையும் என்ற காரணத்தை முன்னிறுத்தியே இதுவரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மாதாந்திர அடிப்படையிலான நீர் பங்கீடு என்ற அம்சம் தீர்ப்பில் இடம்பெற்றிருக்கும் வரை தமிழ்நாடு, கர்நாடகம் காவிரியின் வடிகாலாகவே இருக்கும். இதற்கு நிரந்தர தீர்வு நீர் பங்கீடு என்ற அம்சத்தை தீர்ப்பில் இடம்பெற செய்வது மட்டுமே ஆகும்' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், 'தமிழ்நாட்டில் 35 ஆண்டுகளுக்கு மேலாக கள் தடை தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. கள் மீதான தடையை நீக்க கோரி 18 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கும் வகையில் 2024 ஜனவரி 21 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பனை, தென்னை, ஈச்ச மரங்களில் இருந்து கள் இறக்கி சந்தைப்படுத்த உள்ளோம். ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட அம்மையப்பன் என்பவரை ஊராட்சி செயலாளர் தங்கபாண்டி காலால் எட்டி உதைத்தது கண்டிக்கத்தக்கது. ஊராட்சி செயலாளர் மீது பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:அதிகாரிகளையே மிரள வைத்த 12 மணிநேர சோதனை.. நெல்லை அரசு அதிகாரியிடம் இவ்வளவு சொத்தா?