தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சனாதனத்தை ஒழிப்பேன் என தமிழக அமைச்சர் கூறுவது கேலிக்கூத்து" - ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்! - Udhayanidhi Stalin

சனாதனத்தை ஒழிப்பேன் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுவது கேலிக்கூத்து என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறும் தி.மு.க. முதலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்
ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 6:58 PM IST

சனாதனத்தை ஒழிப்பேன் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுவது கேலிக்கூத்து

சேலம்: சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறும் தி.மு.க. முதலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இன்று (நவ. 26) காலை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் சிறப்பு தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது, "ஆன்மீகம் மட்டும் தான் தனிநபர் ஒழுக்கத்தை உயர்த்தும். பொதுவாழ்வில் எதையும் எதிர்பாராமல் கடைமட்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும்.

சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்த அவர், சனாதனத்தை ஒழிப்பதற்கு உதயநிதிக்கு முன்பாக எத்தனையோ மகத்தான முகலாய மன்னர்கள் எல்லாம் முயன்றிருக்கிறார்கள். கூர்வாள் கொண்டு இந்துக்களை கொன்று குவித்திருக்கிறார்கள். அதில் எல்லாம் ஒழியாத சனாதனத்தை உதயநிதியால் ஒழிக்க முடியாது.

சனாதனத்தை ஒழிப்பேன் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுவது கேலிக்கூத்து. சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது. சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறும் தி.மு.க. முதலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்.

தொடர்ந்து பேசிய அவர், கவர்னரின் முதல் கடமை அரசியல் சாசனத்தை காக்க வேண்டும். அரசியல் சாசனத்துக்கு மாறாக எந்த சட்டம் இயற்றப்பட்டாலும், அதை கிடப்பில் போட வேண்டியதும், உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கேட்பதும், அட்டர்னி ஜெனரல் கருத்தை கேட்பதும் கவர்னரின் கடமையாகும். கவர்னர்கள் வாங்கும் சம்பளம் குறித்து அமைச்சர்கள் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கதாகும். அமைச்சர்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. இவர்கள் எல்லாம் எப்படி அமைச்சர் பதவிக்கு தகுதி ஆனார்கள் என்பது தெரியவில்லை.

மேலும், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கொலையாளிகள், குண்டு வைத்தவர்களை விடுவிக்க தீர்மானங்கள் நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இதை கவர்னர்களால் வேடிக்கை பார்க்க முடியாது. மாநிலங்களில் அரசியலமைப்பு சட்டங்களை பேணிக் காப்பது கவர்னர்களின் கடமை.

ஆளுநருக்கு கொடுக்கும் சம்பளம் நாங்கள் கொடுக்கும் பிச்சை என்கிறார்கள். அப்போ நீங்கள் வாங்கும் சம்பளம் யார் போட்ட பிச்சை. அனைவருக்கும் மக்கள்தான் எஜமானர்கள். மக்களின் வரிப்பணத்தில்தான் அனைவருக்கும் சம்பளம் கிடைக்கிறது என்பதை திமுக அமைச்சர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:பரங்கிமலை அரசு நில ஆக்கிரமிப்பு விவகாரம்; தமிழக அரசுக்கு அறப்போர் இயக்கம் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details