சேலம்: நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவியது. அதனைத் தொடர்ந்து புவி நீள் வட்ட சுற்றுப்பாதையில் சந்திரயான்-3 விண்கலம் நிலை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை தொலைவு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நிலவை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலம், புவி வட்டத்தின் இறுதி சுற்றுப் பாதைக்குள் செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக, சந்திரயான்-3 விண்கலம் நிலவின் நீள் வட்டப்பாதைக்குள் உந்தி தள்ளப்பட்டு வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் மெதுவாகத் தரை இறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிகழ்வில் குளிர்ந்த உருட்டுத் தகடுகளை உற்பத்தி செய்து வழங்கிய சேலம் உருக்காலை (Salem Steel Plant) நிர்வாகத்திற்கு திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் திரவ இயக்க மையத்தின் துணை இயக்குநர் பி.மருதாசலம் பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.