தமிழ்நாட்டில் கடந்த 13ஆம் தேதி நீட் தேர்வால் மூன்று மாணவ, மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்தனர். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (செப்.15) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, சாலையின் நடுவே அமர்ந்து மாதிரி சட்டமன்றம் கூட்டி, தீர்மானம் நிறைவேற்றினர்.
பின்னர் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் கூறுகையில், "தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் பழனிசாமி நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்தினருருக்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்ற வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் இந்திய மாணவர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறோம்.
எங்கள் அமைப்பு சார்பாக மாதிரி சட்டமன்றம் கூடியிருக்கிறோம். இதில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யவும், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க:சென்னை மாகாணத்தின் கடைசி முதலமைச்சர்!