சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொருத்த வேண்டியுள்ளதால் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 20 விழுக்காடு கூடுதல் ஒதுக்கீட்டுடன் மொத்தம் 2,819 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத் தேர்தல் அலுவலர் சி.அ. ராமன், தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடுசெய்யப்பட்டு ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும் பணி நேற்று (மார்ச் 26) நடைபெற்றது.
இதைத்தவிர எடப்பாடி தொகுதியில் மொத்தம் 28 வேட்பாளர்களும், சங்ககிரி தொகுதியில் மொத்தம் 23 வேட்பாளர்களும், சேலம் (மேற்கு) தொகுதியில் மொத்தம் 28 வேட்பாளர்களும், சேலம் (வடக்கு) தொகுதியில் மொத்தம் 20 வேட்பாளர்களும், சேலம் (தெற்கு) தொகுதியில் மொத்தம் 24 வேட்பாளர்களும், வீரபாண்டி தொகுதியில் மொத்தம் 20 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இதனால் இந்த ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் கூடுதலாக 750 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிவகங்கை மாவட்டத்திலிருந்து சேலம் மாவட்டத்திற்கு நேற்றைய தினம் எடுத்துவரப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இருப்பு அறையில் வைக்கப்பட்டு பாரத் மின்னணு நிறுவன பொறியாளர்கள் மூலம் முதல்நிலை சரிபார்க்கும் பணி முடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் மேற்குறிப்பிட்டுள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்குப் பயன்படுத்துவதற்குக் கூடுதலாக 2,819 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் பணி நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் 2021-க்கு பயன்படுத்த தயார்நிலையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் 20 விழுக்காடு கூடுதல் ஒதுக்கீட்டுடன் 2,819 வாக்குப்பதிவு இயந்திரங்கள், சேலம் மாவட்டத்தில் உள்ள மேற்குறிப்பிட்டுள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நேற்று அனுப்பிவைக்கப்பட்டது.
இவ்வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆறு தொகுதிகளுக்கு காவல் துறை பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்படுகின்றன. மேலும், அந்தந்தச் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாதுகாப்பு வைப்பு அறைகளுக்குத் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 24 மணிநேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.