தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வருமானம் 400, பைனான்ஸ் தொகை 300'- திணறும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள்! - auto drivers during curfew

கரூர்: ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வந்தாலும் பயணிகள் குறைவால் போதிய வருமானம் இன்றி தவணையை கட்ட முடியாமல் ஆட்டோ ஓட்டுநர்கள் திணறிவருகின்றனர்.

ஊரடங்கில் ஆட்டோ ஓட்டுநர்கள்
ஊரடங்கில் ஆட்டோ ஓட்டுநர்கள்

By

Published : Oct 18, 2020, 6:56 PM IST

கரோனா ஊரடங்கு பல்வேறு தொழில்களை முடக்கி உள்ளது. அவையெல்லாம் தற்போது ஊரடங்கு தளர்வுகளினால் படிப்படியாக மீண்டு வருகின்றன.

பொதுப்போக்குவரத்தான பேருந்து சேவை, ஆட்டோ சேவை உள்ளிட்டவை தொடங்கப்பட்டுள்ளன. அவ்வாறு தொடங்கப்பட்டும், அரசு போக்குவரத்து கழகம் போதியப் பயணிகள் இன்றி விழிப்பிதுங்கும் வேளையில், ஆட்டோ ஓட்டுநர்கள் என்ன செய்வார்கள்.

அதிலும் தவணைக்கு ஆட்டோ வாங்கியவர்கள், உரிமையாளரிடமிருந்து ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டுபவர்களின் நிலை என்ன எனும் கேள்வி நம்மில் எழுகிறது.

கரூர் மாவட்டம் முழுவதும் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற ஆட்டோக்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்களும் இயங்கப்பட்டு வருகின்றன. அதில் தவணை முறை ஷேர் ஆட்டோக்கள், லோடு ஆட்டோக்கள் ஆகியவை இரண்டு ஆயிரத்திற்கும் மேலாகும்.

கரோனா காரணமாக முடக்கப்பட்ட ஆட்டோ சேவை ஜூன் 2ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது. போதியப் பயணிகள் இல்லாததால், வருவாய் ஈட்ட முடியாமல் தவித்துவருகின்றனர். இதற்கிடையில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வந்தது.

ஆனாலும் அவர்களின் நிலை மாறியபாடில்லை. கரோனா தாக்கத்திற்கு பிறகு மக்கள் ஆட்டோ போக்குவரத்தை பயன்படுத்துவதை குறைத்துவிட்டனர். ஆட்டோ ஓட்டுநர்களுக்கான வணிக ஓட்டுநர் உரிமம் (எஃப் சி) அரசிடம் இருந்து ஆண்டுக்கு ஒரு முறை பெறுவதற்கு, குறைந்தது 20 ஆயிரத்தில் இருந்து 22 ஆயிரம் வரை ஆகும் என்ற நிலையில் அந்தத் தொகையை கூட தற்போதுள்ள சூழலில் ஈட்ட முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர்.

பெண் ஆட்டோ ஓட்டுநர் சத்தியபாமா

இதுகுறித்து கரூர் பெண் ஆட்டோ ஓட்டுநரான சத்தியபாமா தெரிவிக்கையில், "கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். எனது ஆட்டோ கடன் வாங்கி பெறப்பட்டது. அதற்கு தற்போது தவணை கட்ட முடியவில்லை.

அரசு உத்தரவின்படி நிதி நிறுவனங்கள், சில மாதங்களாக தவணை கேட்காமல் இருந்து வந்தன. ஆனால் தற்போது நிலைவேறு, தவணையை கட்ட சொல்ல வற்புறுத்துகின்றனர்.

இதற்கிடையில் எங்களது வீட்டின் அருகில் உள்ளவர்கள், ஆட்டோவில் பலதரப்பட்டவர்கள் பயணம் செய்வார்கள், அவர்கள் மூலம் உங்களுக்கு கரோனா பரவும் அபாயம் ஏற்படும் எனவும், ஆட்டோ ஓட்டுவதை தவிர்க்குமாறும் சொல்லி வழக்காடுகின்றனர். சாலைப் போக்குவரத்து ஸ்டிக்கர் ஓட்டுவதற்கு கூட 650 ரூபாய்க்கு மேல் ஆகின்றது.

ஆனால் எனது வருமானமே 300 ரூபாய் முதல் 400 ரூபாய்தான். அதற்கு பைனான்ஸ் தொகைக்கு 300 ரூபாய் போய்விடுகிறது. இதில் நான் எப்படி எனது வாழ்வாதரத்தையும், குழந்தைகளும் கவனித்துக்கொள்ள முடியும். எனவே அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்டோ ஓட்டுநர் சங்க பொறுப்பாளர் முருகேசன்

அதையடுத்து இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்டோ ஓட்டுநர் சங்க பொறுப்பாளர் முருகேசன் தெரிவிக்கையில், "கரோனா வைரஸ் தாக்கத்தால், ஆட்டோ ஓட்டுனர்களின் நிலை சீர்குலைந்துள்ளது. அதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர்.

அரசு பலமுறை எடுத்துக் கூறியும் நிதி நிறுவன உரிமையாளர்கள் தவணையைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. அண்டை மாநிலம் ஆந்திராவில் ஆட்டோ எஃப் சி பெறுவதற்கு பத்தாயிரம் மட்டுமே வசூலிக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் 20 ஆயிரத்திற்கும் மேல் வசூல் செய்யப்படுகிறது. எனவே தமிழ்நாடு அரசு இன்னும் ஆறு மாத காலம் ஓட்டுநர்களுக்கு தவணை அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்தாலும், அது உடனடியாக எடுக்கப்பட்டால் வாழ்வாதாரம் காக்கப்படும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க:கரோனாவால் அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்கள்

ABOUT THE AUTHOR

...view details