தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றிருப்போம்" - எடப்பாடி பழனிசாமி! - salem news

அதிமுக ஆட்சி அமைந்திருந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று இருப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 12, 2023, 8:03 PM IST

எடப்பாடி பழனிசாமி

சேலம்: ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு தொடர்பாக சேலம் புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ் "அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு சேலம் புறநகரில் இருந்து அதிக அளவில் தொண்டர்களை அழைத்து செல்வது என இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் இளம் வயதில் சாதிச் சண்டையில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது.

கல்விக் கூடத்திலேயே இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்தப்பட்டது வேதனை அளிக்கின்றது. எதிர்காலத்தில் இதுபோல் ஏற்படக் கூடாது. விடியா திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். அதிமுக ஆட்சியில் தான் காவிரிக்காக நிரந்தர தீர்ப்பை பெற்றுள்ளோம்.

அந்த தீர்ப்பின் அடிப்படையில் தான் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் தீர்ப்பாக வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் தான் மாதாந்திர கூட்டம் ஆணையத்தின் தலைமையில் நடைபெறுகின்றது.

கர்நாடகா அரசு திட்டமிட்டு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை தீர்ப்பின் அடிப்படையில் திறந்து விட மறுக்கின்றது. இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஜூன் மாதம் 12ஆம் தேதி குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விட்டதாக கூறுகின்றனர்.

தண்ணீர் திறந்து விட்டால் மட்டும் போதாது. இறுதி வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால் தான் பயிர்கள் விளைச்சல் பெறும். அதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தில் போட்டியிடுவதற்காக பெங்களூருவில் கூட்டம் நடத்தினர்.

அந்த கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு கொடுத்த போது அவர் ஒரு நிபந்தனை விதித்தார். அதே போல் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் திறத்துவிட்டால் தான் எதிர்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வேன் என்று ஸ்டாலின் நிபந்தனை வைத்திருக்க வேண்டும்.

அந்த கூட்டத்திற்கு சென்றபோது கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் தான் வரவேற்றார். அங்கேயே இதுகுறித்து பேசியிருக்கலாமே. எதற்கு கடிதம் எழுத வேண்டும். தமிழ்நாடு மக்கள், டெல்டா விவசாயிகள் மீது ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை. இதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை.

இன்னும் 10 நாட்களுக்கு தான் மேட்டூர் அணையில் தண்ணீர் கையிருப்பு உள்ளது. தற்போது திறக்கப்பட்டு வரும் தண்ணீர் அளவை குறைத்து விட்டனர். 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தால் தான் கடைமடை வரை செல்லும். ஏற்கனவே இந்த தண்ணீர் கடைமடைக்கு செல்லவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை ஸ்டாலின் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மதிக்கவில்லை.

இந்த கூட்டணி மக்களுக்கு எப்படி நன்மை செய்வார்கள். ஆட்சி பொறுப்பேற்றபின் முதல் கையெழுத்து நீட் ரத்து செய்யப்படும் என்று பொய் பேசினார்கள். எங்கே ரத்து செய்தனர். இவர் கையெழுத்து போட்டால் எப்படி ரத்து ஆகும். இப்போது வெவ்வேறு ஆட்கள் மீது பழி சொல்கிறார். ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு பேச்சு. ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடும் கட்சி திமுக என்பது நிரூபணமாகிவிட்டது.

நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கியிருப்போம். அதிமுக ஆட்சியில் தான் 7.5% உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அதற்கு தில், திராணி வேண்டும். ஸ்டாலினுக்கு தில், திராணி உள்ளதா. நீட் தேர்வுக்காக ஸ்டாலினால் ஒருநாள் நாடாளுமன்றத்தை முடக்க முடிந்ததா? தமிழ்நாடு விவசாயிகள் உரிமையை காக்க காவிரி பிரச்சனைக்காக அதிமுக எம்பிக்கள் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினோம்.

திமுகவால் ஒருநாள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து அவையை ஒத்தி வைக்க முடிந்ததா. இதனால் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. நாட்டு மக்கள் இவர்களை நம்பப் போவதுமில்லை. டிடிவி தினகரன் பேசிய பேச்சை எல்லாம் நாங்கள் எப்போதும் பொருட்படுத்துவதே இல்லை. அப்படி பேசுவதை கொண்டுதான் அவர் ஊடகத்திலும், பத்திரிக்கைகளிலும் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்" என்று கூறினார்.

இதையும் படிங்க: "திமுக இரட்டை வேடம் போடும் கட்சியாக உள்ளது" - எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details