விவசாயிகள் பெரும்பாலானவர்கள் தேடித்தேடி விதைப்பது, குறுகிய காலத்தில் வருமானம் கொடுக்கும் பயிர்களைத்தான். அந்த வகையில், முலாம்பழம் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும் பயிர்களில் ஒன்றாக இருக்கிறது. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து, தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார்கள் சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள். கர்ப்பிணிப் பெண்கள் இதனை உட்கொண்டால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதோடு குழந்தையின் முதுகெலும்பும், மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
இந்தப் பழமானது, உடல் உஷ்ணத்தைப் போக்கவும், வயிற்றுப்போக்கைக் குணப்படுத்தவும் உதவுகிறது. வைட்டமின் ஏ, இரும்புச் சத்து, பொட்டாசியம் சத்து ஆகியவை இப்பழத்தில் அதிகமாக உள்ளதால், ரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவுகிறது.
மலிவான விலையில் எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கிய முலாம்பழத்தை விளைவித்த விவசாயிகள் ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கில் விவசாயப் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த போதிலும், அதுசார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
போக்குவரத்து வசதி நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய சந்தைக்குக் கொண்டுசெல்ல முடியாமல் தவிக்கின்றனர். இவற்றை வியாபாரிகளும் வாங்க முன்வராததால், அவை செடிகளிலேயே அழுகிப்போகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கு ஆறுதல் அளிக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் ஏப்ரம் 20ஆம் தேதி முதல் விளைப்பொருள்களை இடைத்தரகர்கள் இல்லாமல் அரசு நேரடி கொள்முதல் செய்யவும், விற்கவும் அனுமதியளித்தது.
இதுதொடர்பாக விவசாயி முருகேசன் கூறுகையில், "ஒரு ஏக்கர் அளவில் முலாம் பழம் பயிரிட்டிருந்தேன். ஊரடங்கு எப்போது அமல்படுத்தப்பட்டதோ, அப்போதிலிருந்தே வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்ய முன்வரவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன். அப்போது தான் விளைப்பொருள்களை அரசே நேரடிக் கொள்முதல் செய்யும் என்ற அறிவிப்பு வெளியானது. பின்னார் தோட்டக்கலைத் துறையினர் நேரடியாக வந்து முலாம் பழம், கத்தரிக்காய் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றனர்" என்றார்.
கரோனா நெருக்கடியில் விவசாயிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய தோட்டக்கலைத் துறை தோட்டக்கலைத் துறையின் உதவி இயக்குநர் ஒருவர் கூறுகையில், "மேல்முக கிராமம் விவசாயி முருகேசன் விளைப்பொருள்களை விற்பனை செய்ய முடியாமல் தவிப்பதை நாங்கள் அறிந்தோம். அவரின் நிலையை உணர்ந்து நாங்களே நேரடியாகக் கொள்முதல் செய்து, மக்களிடம் விநியோகம் செய்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க:மூத்த செய்தியாளர் மரணம்: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்