சேலம்: ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கை சேலம் மண்டலத்தில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில், 110 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சேலம் மண்டல ஜிஎஸ்டி ஆணையர் ராமகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்ததை ஓட்டி, ஜிஎஸ்டி தினம் இன்று(ஜூலை 1) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சேலம் அணேமேடு பகுதியில் உள்ள மண்டல ஜிஎஸ்டி ஆணையரக வளாகத்தில் ஜி.எஸ்.டி தின விழா கொண்டாடப்பட்டது.
சேலம் மண்டல ஜிஎஸ்டி ஆணையர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தெற்கு ரயில்வே சேலம் மண்டல கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா சிறப்பு விருந்தினராக நிகழ்வில் கலந்து கொண்டார். மேலும், மாநில ஜிஎஸ்டி இணை ஆணையாள ஜெயராமன், JSW ஸ்டீல் பொது மேலாளர் (நிதி மற்றும் நிர்வாகம்) இளங்கோ மற்றும் பல்வேறு வர்த்தக பிரமுகர்கள், தணிக்கையாளர்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், வணிகர்கள் என பலர் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். விழாவில் சேலம் ஆணையர் ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்தித்து பேசுகையில், “இந்த ஆண்டு ஜி.எஸ்.டி தினம் எளிமைப்படுத்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டாடி வருகிறது. ஜி.எஸ்.டி வரியானது, கடந்த 6 ஆண்டுகளில் தொழில் முனைவோருக்கு தேவையான சீர்திருத்தங்களை சட்டத்தில் உடனுக்குடன் இணைக்க உதவி புரிந்துள்ளது. இது வரை 49 ஜி.எஸ்.டி கவுன்சில் மீட்டிங் நடைபெற்று சட்டம் வரி செலுத்துவோருக்கான நடைமுறைகள் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய எளிமை படுத்தப்பட்ட சீர்திருத்தங்களால் ஜி.எஸ்.டி வருவாய், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூபாய் 1.86 லட்சம் கோடிகள் வருவாய் நாட்டிற்கு கிடைத்துள்ளது.
உண்மையில் இது நல்ல மற்றும் எளிமையான வரி சேகரிப்பு என்பதை மீண்டும் உறுதி செய்து, 'ஒரு நாடு- ஒரு சந்தை-ஒரு வரி" என்ற குறிக்கோளை அடைவதை நோக்கி செல்வதை தெளிவு படுத்துகிறது. ஜிஎஸ் டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட ஜூலை 2017 ல் வரி செலுத்துவோர் எண்ணிக்கை சுமார் 36000 ஆக இருந்த சேலம் ஆணையக வரி செலுத்துவோர் எண்ணிக்கை, இந்த வருடம் ஜூன் 2023ல் சுமார் 74000 ஆக உயர்ந்துள்ளது. இது ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட கால கட்டத்தில் இருந்து தற்போது சுமார் 110 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.