சேலம் மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சேலத்தையடுத்த கோட்டக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் நகை மதிப்பீட்டு ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார்.
கூட்டுறவு வங்கியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடமானம் வைத்த நகைகளை, அதிகாரிகள் சரிபார்த்த போது, அதில் 4 கிலோ அளவுக்கு போலி நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அந்தப் போலி நகைகள் எந்த தேதியில் அடமானம் வைக்கப்பட்டது என ஆய்வு செய்தபோது, நகை மதிப்பீட்டாளர் மூலமாக 27 நபர்களின் பெயர்களில் நான்கு கிலோ போலி நகைகள் வைக்கப்பட்டதும், இதற்காக 94 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வங்கி மேலாளர் தெய்வமணி, மாநகர காவல் ஆணையரைச் சந்தித்து புகார் கொடுத்ததையடுத்து, நகை மதிப்பீட்டாளர் சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரது வீட்டிற்குச் சென்று உள்ளனர். ஆனால் கவால் துறையினர் வருவதை அறிந்த சக்திவேல், தலைமறைவாகிவிட்டார்.