சேலம்:அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிமுக, பாமக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் வருகை தந்தார். மாவட்ட ஆட்சியர் கார்மேகத்தை சந்தித்துப் பேசிய அவர், சேலம் மாவட்டத்தில் கரோனா பரவல் குறித்து எடுத்துரைத்தார். தனது தலைமையிலான ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கரோனா பாதிப்பு குறைந்தது குறித்தும் விளக்கமாகக் கூறினார்.
அதிகம் உள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறை
இதனையடுத்து, சேலம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவர், முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி, மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்றைக்கு கரோனா நோய் பரவலில் தமிழ்நாடு இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. இது வேதனையளிக்கிற விஷயம். தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, வேகமாகப் பரவும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். சேலம் மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ளது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்க போர்கால நடவடிக்கை தேவை- எடப்பாடி பழனிசாமி ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்கினாலே உயிரிழப்பைத் தடுக்கலாம். மத்திய அரசிடம் பேசி கூடுதலாக ஆக்சிஜன் பெற்று அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும். ஏற்கெனவே, நான் கடிதம் மூலமாக பிரதமரிடம் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.
அதிமுக ஆட்சி vs திமுக ஆட்சி
நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, தினசரி பாதிப்பு 6,500 என்பதே உச்சமாக இருந்தது. தற்போது, 35 ஆயிரமாக தினசரி நோய் பாதிப்பு உயர்ந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. நோயாளிகளின் எண்ணிக்கைக்குத் தேவையான ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்த அளவிற்குத்தான் சேலம் மாவட்டத்தில் தற்போதும் ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. இதனை அதிகப்படுத்தவில்லை.
நாளொன்றுக்கு 800 பேர் சராசரியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை மாவட்ட நிர்வாகம் உடனே அதிகரிக்க வேண்டும். சேலம், உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் படுக்கை சிகிச்சை மையத்தினை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அனைத்துப் பணிகளையும் ஒதுக்கிவைத்து விட்டு மூச்சுத் திணறலுடன் வரும் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும்.
சோதனைகளை அதிகப்படுத்தவேண்டும்
தமிழ்நாடு முழுவதும் எங்கள் ஆட்சியில் அப்போது, 3,500 காய்ச்சல் சிகிச்சை முகாம்கள் நாள்தோறும் நடத்தப்பட்டன. அதனால் கரோனா கட்டுப்படுத்தப்பட்டது. அதேபோல நடவடிக்கை எடுத்தால் இப்போதும் கட்டுப்படுத்தலாம். இதேபோன்று பெரிய நகராட்சி, ஊராட்சிகளில் வீடு வீடாக சோதனை நடத்த வேண்டும். ஒரு நாள் பாதிப்பு 36 ஆயிரம் பேராக உயர்ந்துள்ள நிலையில், தினசரி ஆர்டிபிசிஆர் பரிசோதனையை மூன்று லட்சமாக அதிகரிக்க வேண்டும்.
'காய்ச்சல் முகாம்கள் நடத்தி ஆர்டிபிசிஆர் சோதனையை அதிகப்படுத்த வேண்டும்'- எடப்பாடி பழனிசாமி தற்போது, நடைபெறும் பரிசோதனை போதாது. பரிசோதனை மையங்களையும் அதிகரித்து, 24 மணி நேரத்தில் முடிவுகளை அறிவிக்க வேண்டும். தற்போது சோதனை முடிவுகள் வர மூன்று நாள்கள் வரை ஆவதால், நோய் பாதிப்பு அதிகமாகிறது. நாங்கள் 24 மணி நேரத்தில் சோதனை முடிவுகளை கொடுத்தது போல விரைவாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் நோய் பாதிப்பில் இருந்து குணமாக சிகிச்சையளிக்க முடியும்.
தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு கூட கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை. தலைமைச் செயலாளர் மூலமாகத் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, சமூகப் பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களைப் பொருத்தவரை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அந்தந்த பகுதி அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.
அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை
ஊரடங்கு காலத்தில் மாற்றுத் திறனாளிகள், ஏழை, எளிய மக்களுக்கு உணவு கிடைக்க சமுதாய சமையலறை அமைத்து உணவு அளிக்கப்பட்டது. இதேபோன்று தற்போதும் வழங்கப்பட வேண்டும். அமைப்புசாராத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பினருக்கு கரோனா நிவாரணத் தொகையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தேவையான அளவிற்கு தடுப்பூசி அளிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். 10 விழுக்காடு தடுப்பூசி மட்டுமே வந்துள்ளது. கோவாக்சின் தட்டுப்பாடின்றி கிடைத்து, இரண்டாவது டோஸ் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக, பாமக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இரண்டாவது அலை மிக வீரியமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகமாகியுள்ளன. தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதனைத் தடுக்க முடியும். அதிக அளவு ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அரசு, தனியார் மருத்துவமனைகளில் அதிகரிக்க வேண்டும். மூச்சுத் திணறலோடு ஆம்புலன்ஸில் வருபவர்களுக்கு சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்து விடுகிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களை அப்படியே வீட்டிற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்வதால் தொற்றுப் பரவல் ஏற்படுகிறது. அதிமுக அரசு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி இருந்தது. தற்போது நோயாளிகள் அதிகமாக வருகின்றனர். அதற்கேற்ப கூடுதல் படுக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக உருவாக்கிட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:ஹெச்.பி.எல். நிறுவனத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு