சேலம் : இது குறித்து உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், “சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலப்பட வெல்லம் தயாரிப்பதைத் தடுக்கும் வகையில் பல்வேறு அதிரடி சோதனை நடவடிக்கைகள் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று (ஜன.06) உணவு பாதுகாப்புத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்ணன், குமரகுருபரன், ரமேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் சங்ககிரி வட்டம், தேவூர் அஞ்சல், செட்டிபட்டி ரோடு, சோலக்கவுண்டனூர் பகுதியில் அமைந்திருந்த குடோனில் சோதனை நடத்தினர்.
சோதனையில் நாட்டுச் சர்க்கரை தயாரிப்பில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 6 டன் வெள்ளைச்சர்க்கரை மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் ஆகும். சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று (ஜன.06) கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி மற்றும் இடப்பாடி சுற்று வட்டாரப்பகுதிகளில் அமைந்துள்ள 7 கரும்பாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.