சேலம்:தனியார் மல்டி பிளக்ஸ் திரையரங்கமான ஏ.ஆர்.ஆர்.எஸ் திரையரங்கில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது காலாவதியான 96 கிலோ ஐஸ்கிரீம், 18 கிலோ சிப்ஸ், 16 கிலோ கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. காலாவதி ஆன உணவுப் பொருட்களை விற்பனை செய்த தியேட்டர் நிர்வாகம் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
சேலம் மாவட்டம், புதிய பேருந்து நிலையத்தில் பிரபல தனியார் மல்டிபிளக்ஸ் திரை அரங்கு செயல்பட்டு வருகிறது. இதில் நேற்று முன் தினம், இரவு சினிமா பார்க்க வந்த சேலம் லீ பஜார் பகுதியில் சேர்ந்த தமிழரசன் என்பவர் திரை அரங்கிற்குச் சென்று உள்ளார். அப்பொழுது இடைவெளியின் போது அவர் குடும்பத்தாருக்குத் திரை அரங்கில் விற்பனை செய்யப்பட்ட சிப்ஸ் பாக்கெட் வாங்கி உள்ளார்.
அந்த சிப்ஸ் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்ட தேதி காலாவதியான நிலையில் அந்த பாக்கெட்டை பிரித்த பொழுது அதிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இது குறித்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் தனியார் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர்.