சேலம்: சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்த எடப்பாடி பழனிசாமி விமான நிலைய வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "போக்குவரத்து தொழிலாளர்களின் குறைந்தபட்ச கோரிக்கையைக் கூட இந்த அரசு நிறைவேற்ற வில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி, தொழிலாளர்கள் பணிக்குச் சென்றுள்ளனர். தமிழக அரசு தொழிலாளர்களின் கஷ்ட, நஷ்டங்களைப் புரிந்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தான் தொழிலாளர்கள் கோரிக்கையைக் கேட்கின்றனர். ஆனால், தமிழக அரசு நீதிமன்ற உத்தரவு மீறி உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது. முந்தைய ஆட்சிக் காலத்தில், 22,000 அரசுப் பேருந்துகள் இருந்தது. ஆனால், தற்பொழுது 17,000 பேருந்துகள் மட்டுமே இயங்குகிறது. ஐந்தாயிரம் பேருந்துகள் முழுமையாகப் பழுதாகிக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மானிய கோரிக்கையின் பொழுது 500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என்று கூறுகின்றனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுவதாக. தொடர்ந்து, மூன்று ஆண்டுக் காலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஒரு பேருந்துகள் கூட வாங்கவில்லை.
தமிழகத்தில் எங்குப் பார்த்தாலும் உடைந்த பேருந்துகள் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள பேருந்துகளின் நிலைமை, சிவகங்கையில் ஒரு ஓட்டுநர் பேருந்தை இயக்க முடியவில்லை என்று ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டு சென்று பேருந்தை நிறுத்தி உள்ளனர்.