தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை' - சேலம் ஆட்சியர் ரோகிணி

சேலம்: குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

rohini

By

Published : May 31, 2019, 12:33 PM IST

சேலம் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்கும் ஏற்காட்டில், 44ஆவது கோடை விழா, மலர்க்காட்சி இன்று தொடங்கி ஜூன் மாதம் இரண்டாம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலைத் துறையும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து செய்துள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் ரோகிணி,

"ஏற்காடு கோடை விழா மலர்க்காட்சி ஏற்பாடுகள் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளன. ஏற்காடு அண்ணா பூங்காவில் இரண்டரை லட்சம் மலர்களைக் கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஏற்காடு முழுவதும் சாலைகள் சீரமைக்கப்பட்டு, மூன்று நாட்களுக்கு சேலத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதை கோடை விழாவுக்காக மூன்று நாட்கள் மட்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மீண்டும் சேலம் வருவதற்கு கொட்டச்சேடு, குப்பனூர் மலைப்பாதையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் காவல் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி

சுற்றுலா வரும் பயணிகளின் அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீதும் பொது இடங்களில் மது அருந்துவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் நிலவிவரும் குடிநீர் பிரச்னை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஆட்சியர் ரோகிணி, சேலம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், வீடுகளுக்கு தனி மோட்டார் அமைத்து யாரும் தண்ணீர் எடுக்க வேண்டாம் என்றும் அவ்வாறு எடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details