சேலம்:சேலத்தில் தனியார் திருமண மண்டபத்தில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், இஸ்லாமிய மக்கள் 700 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (நவ.30) நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு அதிமுகவில் இணைந்த புதிய உறுப்பினர்களை வரவேற்று பேசினார்.
பின்னர் மேடையில் பேசிய அவர், "அதிமுக எப்போதும் சிறுபான்மை மக்களின் காவலனாக இருக்கும். ஹஜ் யாத்திரை (Haj Yatra) செல்ல அதிமுக ஆட்சியில்தான் அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது. புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி வழங்க அரசு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது. சந்தனக்கூடு நிகழ்ச்சிகளுக்கு அரசு செலவிலேயே சந்தனக் கட்டைகளை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்ற பொய் தோற்றத்தை ஏற்படுத்தியது. அதை மக்கள் இன்று உணர்ந்துவிட்டனர். சிறுபான்மை மக்களின் ஆதரவு அதிமுகவுக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அத்தியாவசியப் பொருட்களின் விலை 40% உயர்ந்துள்ளது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தனது குடும்பத்தின் மீதுதான் அதிக அக்கறை உள்ளது. அதனால்தான், மக்கள் படும்பாடு அவருக்கு தெரியவில்லை. திமுக கட்சியாக செயல்படவில்லை. அது நிறுவனமாக, ஒரு குடும்பக் கட்சியாக திகழ்கிறது. அதனால்தான், மக்களுக்கு நல்லது கிடைப்பது அரிதாக உள்ளது.