சேலம் அடுத்த ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஜன. 11) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "திமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 21 பொருள்கள் தருவதாக அறிவித்து தற்போது 18 பொருள்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
கட்டை பை
பொங்கல் பரிசு தொகுப்பை எடுத்துச் செல்வதற்கு கட்டை பையை வீட்டிலிருந்து வரும்போது எடுத்து வரும்படி அறிவித்துள்ளனர். கட்டை பை எடுத்து வருவோருக்கு மட்டுமே பொருள்கள் வழங்கப்படுகின்றன.
பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற வெல்லத்தை வழங்குவது கண்டிக்கத்தக்கது. பொதுமக்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்றவையாக வழங்கப்படும் வீடியோ வெளிவந்த வண்ணம் உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து பொருள்கள் குறைந்த விலையில் வாங்கப்படுகின்றன.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறைகேடு தரமற்ற பொருள்
இதன் மூலமாக கமிஷன் கிடைப்பதால் இந்தச் செயலில் அரசு ஈடுபட்டு வருகிறது. கரும்பு வழங்குவதிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் திமுக அரசு கொள்ளை அடிப்பது தான் மிச்சம். முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்த பிறகும் இதுபோன்று பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்ற பொருள்களையே வழங்குகிறார்கள்.
திமுக அரசு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே அதிமுக அரசு பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று அறிவித்து அதற்கு அபராதமும் விதித்தோம். ஏற்கனவே நான் கொண்டுவந்த பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விளம்பரத்துக்காக செயல்படுகிறார்கள்.
முதலமைச்சர் விளம்பரம்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான பொய் வழக்கு திட்டமிட்டு போடப்பட்டது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் காவல்துறையினரை தவறாக பயன்படுத்தி வருகிறது. திமுக அரசை பொறுத்தவரை விளம்பரம் மட்டுமே, முதலமைச்சர் டீ குடிப்பதற்கும், சைக்கிள் ஓட்டும் போதும் தனது பாதுகாப்புக்காக 500 காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அரசு கரோனா பரவலை சரியான வழியில் கட்டுப்படுத்த தவறிவிட்டது.
ஏற்கனவே கரோனா பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியதை பயன்படுத்தி தான் தற்போது கட்டுப்படுத்தினார்கள். தனியாக எதுவும் வாங்கவில்லை. ஆனால் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதிமுக அரசின் ஆலோசனைகள் பெற்று இருந்தால் கரோனா பாதிப்பு இவ்வளவு வந்திருக்காது. அரசு எல்லாவற்றிற்கும் குழுக்கள் மட்டுமே அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் செயல்பாடுகள் இல்லை.
ஆன்லைன் சூதாட்டம்
திறமை இல்லாத அரசாங்கமாக திமுக அரசாங்கம். நாட்டிற்கு வழிகாட்டியாக செயல்படும் அரசாங்கம் என்று கூறுகிறார் ஸ்டாலின். ஆனால் பொங்கல் பரிசுப் பொருள்களை தரமற்றதாக கொடுப்பதுதான் வழிகாட்டியா?. ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திறம்பட வாதாடததால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் வந்துவிட்டது. இதனை உடனடியாக தடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கட்டி முடிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரியும் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டவை தான்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:நரேந்திர மோடியை படுகொலை செய்ய திட்டம் - பகீர் கிளப்பும் ஹெச். ராஜா