தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இது கருத்து திணிப்பு: வெல்லப்போவது யார் என்பது 23ஆம் தேதி தெரியும் - பழனிசாமி!

சேலம்: மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து வெளியானது, கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி

By

Published : May 20, 2019, 4:50 PM IST

சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்," தமிழ்நாட்டின் 38 மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும், அதிமுக கூட்டணியே வெற்றிபெறும். ஊடகங்கள் தற்போது வெளியிட்டு வருவது கருத்துக் கணிப்புகள் இல்லை, கருத்துக் திணிப்புகள்.

2016 சட்டப்பேரவை தேர்தலில் நான் தோல்வி அடைவேன் என்று ஊடகங்கள் கருத்து கணிப்புகள் வெளியிட்டன. ஆனால் சேலம் மாவட்டத்தில் 10 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. நான் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். வரும் 23ஆம் தேதி, ஊடகங்கள் சொல்லும் கருத்து கணிப்பு உண்மையாகுமா அல்லது நாங்கள் கூறுவது உண்மை ஆகுமா என்று தெரிந்துவிடும்.

தமிழ்நாடு அரசை பொறுத்தவரை ஹைட்ரோ கார்பன் திட்டம் மட்டுமல்ல மக்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். ஆனால் சேலம் சென்னை எட்டு வழி சாலை என்பது நாட்டின் தொழில் வளர்ச்சிக்கானது. எட்டு வழி சாலை போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சாலை விபத்துகளை தடுப்பதற்காகவும், எரிபொருளை சிக்கனம் செய்வதற்காகவும் கொண்டு வரப்பட உள்ளது. மேலும் எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்ப்பவர்கள் வெறும் ஏழு விழுக்காடு பேர் மட்டுமே. எனவே அவர்களும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தாமாக முன்வந்து எட்டு வழி சாலை திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. மழை பொய்த்ததால் அனைத்து பகுதிகளிலும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை போக்குவதற்காக தேர்தலுக்கு முன்னரே அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையைக் கூட்டி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஆளுநருக்கு, ஏற்கனவே நாங்கள் தீர்மானத்தை அனுப்பி வைத்திருக்கிறோம். ஏழு பேர் விடுதலையில் கால தாமதம் ஆவது குறித்து ஆளுநரிடம்தான் கேட்க வேண்டும். ஏழு பேர் விடுதலையில் அதிமுக என்ன செய்தது என்றும் திமுக என்ன செய்தது என்றும் மக்களுக்கு தெளிவாக தெரியும்", என்றார்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி

ABOUT THE AUTHOR

...view details