கரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் பூட்டுதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் என பல தரப்பினரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக, உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றின் வணிகம் முழுமையாகத் தடைபட்டுள்ளன. சேலம் மாநகரில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கி செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முழுவதும் தடைபட்டதால், சேலத்தின் பிரபல நட்சத்திர விடுதிகள் அனைத்தும் வெறிச்சோடி கிடக்கின்றன.
ஊரடங்கால் வெறிச்சோடி கிடக்கும் நட்சத்திர விடுதிகள் இதனால் நட்சத்திர விடுதிகளின் உரிமையாளர்கள் மட்டுமல்லாது விடுதிகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாகியுள்ளது.
நட்சத்திர விடுதிகளின் தற்போதைய நிலை குறித்து பேசிய தமிழ்நாடு டூர்ஸ் & ஹாஸ்பிட்டாலிட்டி அசோசியேசன் இணைச் செயலாளர் கார்த்திக், "இந்த கோடைகாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சேலத்தில் அதிகரிக்கும். ஆனால் அவர்களின் வருகை இல்லாத காரணத்தால் அனைத்து விடுதிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கால் வெறிச்சோடி கிடக்கும் நட்சத்திர விடுதிகள் மாத ஊதியம் தருவதில்கூட மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகிறோம். எனவே ஊரடங்கு முடிந்த பிறகு ஒரு வருடத்திற்கு எங்களது இழப்பை ஈடுகட்ட முடியாது. இதனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் ஜிஎஸ்டி, வருமான வரி உள்ளிட்டவைகளிலிருந்து தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கு விலக்கு அளித்து உதவிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.