தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல - முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்! - kn nehru

திமுக ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல என்று முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல - ஸ்டாலின் திட்டவட்டம்!
திமுக ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல - ஸ்டாலின் திட்டவட்டம்!

By

Published : May 24, 2022, 7:57 PM IST

சேலம்:தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள செல்லியம்பாளையத்தில் இன்று (மே 24) நடைபெற்றது. சேலம் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டமானது மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நிகழ்ந்தது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்றினார்.

நேரு என்றால் மாநாடு:அப்போது, ''கோட்டையும் கோயிலும் அமைந்த ஊராக ஆத்தூர் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ராணுவ வீரர்கள் இருந்த ஊர் ஆத்தூர். திமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் ராணுவ வீரர்களாக உள்ளனர். சேலம் மாவட்டத்தின் 2ஆவது பெரிய நகரமாக ஆத்தூர் உள்ளது. இவ்வளவு பெரிய ஊரில் ஒரு பெரிய மாநாட்டை நடத்துவது போல ஏற்பாடு செய்துள்ளனர்.

நேருவுக்கு பெயர் மாநாடு என்றுதான் அர்த்தம். கடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் சேலம் மாவட்டம் எதிர்பார்த்த வெற்றியைத் தராவிட்டாலும், அடுத்து வந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில், சட்டப்பேரவைத்தேர்தலில் ஏற்பட்ட பள்ளத்தை நிரப்புவதற்காக நேருவை அனுப்பி வைத்தோம். நேரு வந்தார்; வென்றார் என்ற நிலையை அவர் ஏற்படுத்தியுள்ளார்.

இயற்கையும் நமக்கு துணை: அடுத்து வரும் தேர்தலில் நிச்சயம் திமுக வெல்லும் என்ற நம்பிக்கை தற்போது ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் சுறுசுறுப்பாக பணியாற்றி வருவதாக நேரு சொல்லி இருக்கிறார். அவர்கள் மாவட்டத்தை வழிநடத்துவதோடு, முப்படை தளபதிகள் போல செயல்படுகிறார்கள். அதே நேரத்தில் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன். திமுக தீரர்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசியல் பொருளாதார மேம்பாட்டினை மேம்படுத்திடும் வகையில் திமுக கொடியின் வரலாறு உள்ளது. சமூகத்தின் இருண்ட நிலையை நீக்கி ஒளியூட்டும் உதயசூரியன் நம்மிடம் இருக்கிறது. கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி திமுக ஆட்சிக்கு வந்தது. முதலமைச்சர் பதவியேற்கும் போது சிறு தயக்கம் இருந்தது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிகாலத்தில் நடைபெற்ற சீர்கேடுகளை ஓராண்டில் சரி செய்ய முடியுமா என்ற தயக்கம் இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் தமிழ்நாடு எழுச்சி பெற்றிருக்கிறது.

திமுக ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல - ஸ்டாலின் திட்டவட்டம்!

உறங்கி கிடந்திருந்த நிர்வாகம் பேரெழுச்சி பெற்றிருக்கிறது. ஓராண்டு காலத்தில் மிகப்பெரிய நம்பிக்கை கிடைத்துள்ளது. இந்தியாவின் சிறந்த மாநிலமாக, அனைத்து வளங்களையும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. வழக்கமாக மேட்டூரில் ஜூன் 12ஆம் தேதிதான் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பெற முடியும்.

சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள்: திமுக ஆட்சியில் ஒரு முறை மட்டுமே ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மற்ற ஆண்டுகளில் காலதாமதமாகவே திறக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. நடப்பாண்டில் இயற்கையே இந்த ஆட்சிக்கு ஆசி வழங்கியது போல தண்ணீர் வரத்து அதிகமாகிவிட்டது. நாடு விடுதலை அடைந்த பிறகு மே மாதத்தில் தண்ணீர் திறப்பது இதுதான் முதல் முறை.

மக்கள் மட்டுமல்ல, இயற்கையே நம் பக்கம் இருக்கிறது என்பதற்கு இதுதான் அடையாளம். மேட்டூர் அணை நீர் கடைமடை வரை சென்றடையும் வகையில், ரூ.80 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றன. கடந்த ஆண்டு குறுவை சாகுபடி தொகுப்பு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தியதால், 4.90 ஹெக்டேர் உற்பத்தி அதிகரித்தது. ரூ.1.18 கோடி அளவில் நெல் உற்பத்தி அதிகரித்தது.

பெண்களுக்கு இலவசப் பயணம் மிகப்பெரிய மாற்றத்தை தந்துள்ளது: தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறுவதால் தான் மண் வளம் செழித்து விவசாயம் நன்றாக உள்ளது. தமிழ்நாடு அரசு எடுத்து வரும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாகப் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்று வருகிறது. பெண்களுக்கு இலவச பயணம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு வேலைக்கு, தனியார் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான மாத செலவில் ரூ.2500 மீதமாகியுள்ளது.

மக்களைத்தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டங்கள் லட்சக்கணக்கானவர்களை சென்றடைந்துள்ளது. பெட்ரோலுக்கு ரூ.3 குறைத்தது. கரோனா காலத்தில் ரூ.4,000 மதிப்பில் மளிகைப் பொருட்கள் கிடைத்தது. ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆன்மிக அரசியல்: இந்த திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டம், தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் அந்தந்த தொகுதிகளில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத திட்டங்கள் நிறைவேற்றப்படும். திமுக தொகுதி மட்டுமல்ல, 234 தொகுதிகளுக்கும் அனைத்து திட்டங்களையும் சரி சமமாக வழங்கி வருகிறோம்.

எதிர்க்கட்சிகளும் பாராட்டக் கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. தமிழ்நாட்டை விட்டுச்சென்ற தொழில் நிறுவனங்கள் மீண்டும் தொழில் தொடங்க வந்துள்ளன. திமுக ஆட்சியின் மீது எந்த குறையும் சொல்ல முடியாதவர்கள் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை சொல்லி வருகிறார்கள். 2,500 திருக்கோயில்களின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆவணங்கள் முழுமையாகப் பதிவேற்றப்பட்டுள்ளன.

‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உண்மையான ஆன்மிகவாதிகள் என்றால் திமுக அரசை பாராட்டியிருக்க வேண்டும். ஆனால், மதவாதத்தைத் தூண்டி திமுக அரசு அவதூறு பரப்பி வருகிறார்கள். ஆன்மிகத்தின் பெயரால் திமுக மீது சிலர் குறை சொல்லத்தொடங்கியுள்ளனர்.

திமுக ஆட்சி ஒருபோதும் ஆன்மிகத்திற்கு எதிராக இருந்ததும் இல்லை. இருக்கப்போவதும் இல்லை. என்றும் திமுக ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல. மக்களுக்கு சேவை செய்யவே நேரம் போதாமல் இருப்பதால், தேவையற்ற விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, அவருடைய தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

நிதி வழங்காத மத்திய அரசு: திமுக நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு கேட்டு 10,000 பேர் திரண்டனர். அதிமுக ஆட்சியில் சாலை மட்டுமே அமைக்கப்பட்டது. அதுவும் ஏற்கெனவே அமைக்கப்பட்ட சாலைதான் அமைக்கப்பட்டது. எடப்பாடியில் ஜவுளிப்பூங்கா, கொங்கணாபுரத்தில் தொழிற்பேட்டை, மேட்டூர் அணை உபரிநீர் திட்டம், உழவர் கூட்டுறவு சங்கம் என எந்த கோரிக்கையையும் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றவில்லை.

திமுக ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல - ஸ்டாலின் திட்டவட்டம்!

இன்றைக்கு தினந்தோறும் திமுக அரசை விமர்சித்து அறிக்கை விடும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கும்போது எதுவும் செய்யவில்லை. திமுக அரசு கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியை விட ஓராண்டில் அனைத்து வித சாதனைகளையும் செய்துள்ளது. அதிமுக ஆட்சியைவிட, திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில், சேலம் மாவட்டத்தில் விரைவில் ஜவுளிப் பூங்கா அமையவுள்ளது. ரூ.28 கோடி மதிப்பீட்டில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது. கருப்பூரில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், டைடல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பணிகள் விரைவில் தொடங்கும்.

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, பெட்ரோல் விலையைக் குறைப்போம் என சொல்லி ரூ.3 குறைத்துள்ளோம். ரூ.1160 மதிப்புள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கலால் வரியைக் குறைத்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. மத்திய அரசு வரியைக் குறைக்கும்போது மாநில அரசின் வரியும் குறையும். ஒப்பிட்டுப் பார்த்தால் மத்திய அரசு இன்னும் விலையைக் குறைக்க வேண்டும்.

ஐந்து மாநிலங்களில் தேர்தல் வந்ததால் குறைக்கப்பட்ட விலை மீண்டும் ஏற்றப்பட்டது. பெட்ரோல், டீசல் விலையை முதலில் அதிகமாக உயர்த்தி விட்டு, அதன்பின்னர் குறைவாகவே குறைக்கிறார்கள். மக்களோடு மக்களாக இருக்கும் மாநில அரசு கல்வி, மருத்துவம், மின்சாரம், சத்துணவு உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி பணியாற்றுவதற்காக உரிய நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கவில்லை.

மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.21,190 கோடி இதுவரை வரவில்லை. பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் தமிழ்நாடு அரசு பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. கரோனா தொற்றின் தீவிரம் குறைந்துள்ளதால், பொதுக்கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளோம். கடந்த 10 நாட்களாக தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

திராவிட மாடல் அரசு: திமுக தொண்டர்கள் தமிழ்நாடு அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி மனதில் பதிய வைக்க வேண்டும். ஆளுங்கட்சியாக செய்யும் சாதனைகள், எதிர்க்கட்சியாக இருக்கும்போது நடத்திய போராட்டங்கள்தான் திமுகவை உயிர்ப்புடன் வைத்துள்ளன. திமுகவின் சாதனைகளை எத்தனை நச்சு சக்திகள் வந்தாலும் வீழ்த்திட முடியாது. இதற்கு காரணம் திமுக தொண்டர்கள்தான். தொடர்ந்து மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும்.

அனைவருக்கும் பயனளிக்கும் ஆட்சி இதுதான். ‘எனது அரசு’ என நான் எப்போதும் சொல்லவில்லை. நமது அரசு; திராவிட மாடல் ஆட்சி என்றால் சமத்துவம், சமூக நீதியும் இணைந்தது. பெரியார், அண்ணா , கலைஞர் வழியில் திமுக தொண்டர்கள் ’திராவிட மாடலை’ எட்டுத் திக்கும் எடுத்துச்செல்ல வேண்டும். திராவிடம் என்ற சொல், அரசியல் தத்துவம் என எடுத்தாளப்படுகிறது.

தமிழை வளர்த்தது, சாதியை ஒழித்தது எனப் பல்வேறு சிந்தனைகளை திமுக கொண்டு வந்துள்ளது. 5 முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்த கருணாநிதி பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். சுயமரியாதை, மாநில சுயாட்சியை திராவிட மாடல் ஆட்சிதான் நிறைவேற்றியுள்ளது. கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்தி மக்களின் சமூக மதிப்பை உயர்த்துவதுதான், திராவிட மாடல் ஆட்சி.

திராவிட மாடல் என்பது எதையும் சிதைக்காது. மாறாக அது சீர் செய்யும். யாரையும் பிரிக்காது. அனைவரையும் ஒன்று சேர்க்கும். அனைவரையும் சமமாக நடத்தும். தோளோடு தோள் நின்று அரவணைக்கும். நரிக்குறவர்கள், இருளர் இன மக்கள், மாற்றுத் திறனாளிகள் என நலிவுற்றோர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகள் மட்டுமன்றி தொடர்ந்து திமுக ஆட்சியில் இருந்தால், உலகின் மிகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மாறும்.

நிதி நிலைமை சீரானால் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்தியிருக்க முடியும். கொடுத்த வாக்குறுதிகளை அண்ணா மீது ஆணையாக நிச்சயம் நிறைவேற்றுவேன். கடுமையான நிதி நெருக்கடியை மீறித்தான் ஓராண்டில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளோம். என்னுடைய சக்தியை மீறி தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்க நான் தயாராக உள்ளேன்” எனப் பேசினார்.

இதையும் படிங்க:மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்துவைத்தார் முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details