சேலம் மாவட்ட மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்கும் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழ்நாட்டிலேயே இயற்கையாக ஏற்காடு மலை அடிவாரத்தில் வனப்பகுதியோடு ஒன்றிணைந்துள்ளது, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா. வேறு எந்த மாவட்டத்திலும் இதுபோன்று இயற்கைச் சூழலுடன் கூடிய உயிரியல் பூங்கா இல்லை.
சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குப் பிறகு பெரிய உயிரியல் பூங்கா அமைப்பதற்கான சூழல் சேலத்தில் மட்டுமே உள்ளது. சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா செயற்கையாக அமைக்கப்பட்டது. ஆனால்,சேலத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இயற்கையாகவே அமைந்திருக்கிறது.
சேலம் மாநகர மையப்பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் மான், குரங்கு, நரி, மலைப்பாம்பு, பறவைகள் போன்ற குறிப்பிட்ட அளவில் மட்டுமே வன விலங்குகள் உள்ளன. இந்தப் பூங்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி 100 ஹெக்டேர் பரப்பளவில் சிங்கம், புலி, யானை, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் பூங்காவாக மாற்றலாம். இதனால் இந்த இடம் மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறும்.