சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் சேலத்தாம்பட்டி ஏரி, சுற்றுவட்டாரத்தில் உள்ள பத்து கிராமங்களுக்கு நிலத்தடி நீர் மட்டத்திற்கு ஆதாரமாக விளங்கி வருகிறது. இப்பகுதி சேலம் மாநகரை ஒட்டியுள்ள பகுதி என்பதால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக போதுமான பராமரிப்பு இன்றி ஏரி முழுவதும் முட்புதர்கள் மண்டியுள்ளன.
இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சேலம் மாநகரில் பெய்யும் அதிகப்படியான மழைநீரால் ஏரி நிரம்பி வழிவதும், ஏரி அருகேயுள்ள மின் நிலையம் வெள்ளக்காடாவதும் வாடிக்கையாக உள்ளது. ஏரி நீர் வழிந்தோடுவதால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், ஏரி நீர் மாசுபடுவதைத் தடுத்து 10 கிராமங்களின் விவசாயத்தைப் பாதுகாக்கவும் பசுமை தாயகம் அமைப்பின் சார்பில், மாவட்ட நிர்வாகத்தின் முழுமையான ஒப்புதலுடன் சிவதாபுரம் பகுதியிலுள்ள ஆண்டிப்பட்டி ஏரி, சேலத்தாம்பட்டி ஏரி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சில நாட்களாக சேலம் பகுதிகளில் பெய்த கனமழையால் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி தற்போது கடல்போல் காட்சியளிக்கிறது.
இது குறித்து பேசிய பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில துணை செயலாளர் ஆனந்தராஜ், "ஏரியை முற்றிலுமாக தூர்வாரி அதனை ஆழப்படுத்தி அதிகப்படியான நீரைத் தேக்கி, சுற்றுலாத் தளமாக இதனை மாற்றவேண்டும் என்று உயர்ந்த லட்சியத்தோடு செயல்பட்டு வருகிறோம். எங்களுடன் சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.