தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக திமுக பேரூராட்சித் தலைவர் மீது திமுக உறுப்பினர்களே புகார் - சேலத்தில் பரபரப்பு! - சேலம் மாவட்ட செய்திகள் இன்று

Salem DMK: 12 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக செந்தாரப்பட்டி திமுக பேரூராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

dmk-councillors-petition-to-collector
திமுக பேரூராட்சி தலைவர் மீது திமுக உறுப்பினர்களே புகார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 7:02 AM IST

சேலம்:சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செந்தாரப்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த துணைத் தலைவர் அமுதா (7வது வார்டு உறுப்பினர்), ராஜஸ்ரீ (3வது வார்டு உறுப்பினர் ) உள்ளிட்ட 7 திமுக வார்டு உறுப்பினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் திமுக பேரூராட்சி துணைத் தலைவர் அமுதா கூறும்போது, 'எங்கள் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. அதில் 11 வார்டுகள் திமுக உறுப்பினர்கள். எஞ்சிய 4 வார்டு அதிமுக உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், எங்களது வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்படாமல் உள்ளன. இது குறித்து திமுக பேரூராட்சித் தலைவர் லீலா ராணியிடம் கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்கவில்லை.

மேலும், குறிப்பிட்ட பணிகளுக்கு அரசிடமிருந்து ஒப்புதல் வந்த பிறகும், வசதிகளை செய்து கொடுக்காமல் அவர் மெத்தனமாக உள்ளார். அதேநேரத்தில் அதிமுகவைச் சேர்ந்த 4 உறுப்பினர்களின் வார்டுகளுக்கு மட்டும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கிறார்.

ஆனால், எங்களுடைய 7 வார்டுகளுக்கு மட்டும் எந்த ஒரு பணியும் செய்யாமல், சுமார் 12 லட்சம் ரூபாயை கையாடல் செய்துள்ளார். இது தொடர்பாக நாங்கள் பேரூராட்சித் தலைவர் லீலா ராணியிடம் கேட்டபோது, ‘எனக்கு ஆதரவாக உள்ளவர்களுக்கு மட்டுமே நான் செயல்பட முடியும்.

உங்களுக்கு எதுவும் செய்ய முடியாது. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம். யாரிடம் புகார் தெரிவித்தாலும், என்னை ஒன்றும் செய்ய முடியாது' என்று கூறி அலட்சியப்படுத்தி வருகிறார். மேலும், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தில், பணிகள் செய்ததற்கான வரவு செலவு கணக்கு கேட்டதற்கு, பதில் எதுவும் சொல்லாமல், உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் மெத்தனமாக பதில் அளிக்கிறார்.

எனவே, எங்கள் வார்டு மக்களுக்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். திமுகவின் உறுப்பினராக இருந்தும் எந்த பயனும் இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து 12 லட்சம் ரூபாய் கையாடல் செய்த திமுக பேரூராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுத்து, வரவு செலவு கணக்குகளை அனைத்து உறுப்பினர்களுக்கும் முறையாக தெரிவிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 8,833 பேர் தகுதி நீக்கம்.. அரசு கூறும் காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details