தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் 2 திமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிநீக்கம்..! ஆட்சியர் அதிரடி நடவடிக்கை - DMK panchayat leaders suspended in Salem

Salem News: சேலம் மாவட்டத்தில் 2 திமுக ஊராட்சி மன்ற தலைவர்களைப் பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Salem District collector S karmegam IAS
சேலத்தில் 2 திமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிநீக்கம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 1:28 PM IST

சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பைத்துர் ஊராட்சி மன்ற தலைவராக கலைச்செல்வி என்பவர் உள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், அதே கிராமத்தில் கற்கள் மற்றும் மண்களை கொண்டு கரை அமைக்கும் பணிக்காக ரூ.3 லட்சத்திற்கு தனது மாமனார் பெயரில் அரசு விதிமுறைகளுக்கு முரணாக டெண்டர் அளித்து செயல்பட்டதாக இவர் மீது புகார் எழுந்தது. மேலும், இந்த முறைகேடு குறித்து மாவட்ட ஆட்சியர் அமைத்த குழுவிடம் விசாரணைக்கு ஆஜராகாமல் அலட்சியமாகவும் அவர் செயல்பட்டு வந்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதித் திட்டம் 2005-ன் படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களின் அடிப்படை உரிமையான வேலைவாய்ப்பை அவர்களிடம் அளிக்காமல், அவர்களுக்கான வேலை கணக்கு அட்டைகளை, தன்வசம் வைத்திருந்தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 20511 ஊராட்சிகளின் ஆய்வாளர், மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி என்பவரை, ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து பதவிநீக்கம் செய்து இன்று (டிச.20) மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இதேபோல, சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவியாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக அமுதா என்பவர் உள்ளார். இவர் தவறான ஊராட்சி தீர்மானங்களை நிறைவேற்றி, வேலை உத்தரவு வழங்காமல் மூன்று பணிகளை ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ள அனுமதித்துள்ளார்.

மேலும், தனது கணவரை ஊராட்சி மன்ற செயல்பாடுகளில் சுதந்திரமாக செயல்பட அனுமதித்துள்ளார். அமுதா மற்றும் அவரின் கணவர் ஆகியோர் அதே ஊராட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரரிடம் திட்டப்பணிகளை மேற்கொள்ள பணத்தை கையூட்டாக பெற்றதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ள காரணங்களுக்காக, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 2621 ஊராட்சி ஆய்வாளர், மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தேவியாக் குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா என்பவரை பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஊராட்சி நிர்வாகம் நலனை கருத்தில் கொண்டு, இந்த இரண்டு பேரும் ஊராட்சி மன்ற தலைவர்களாக தொடர்ந்து செயல்பட்டால், தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வார்கள் என்பதால் இந்த அதிரடியான முடிவை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், சேலத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து திமுகவைச் சேர்ந்த இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் முறைகேடு காரணமாக பதவி பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மாநிலங்களவைத் தலைவரைப் போல் நடித்த எம்பி.. குடியரசுத் தலைவர், பிரதமர் வருத்தம்!

ABOUT THE AUTHOR

...view details