சேலம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஏப்.19 ) மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சரக டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு புகார்தாரர் மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவற்றின் மீது விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி ராஜேஸ்வரி, ''சேலம் சரகத்துக்கு உட்பட்ட சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாதம்தோறும் இரண்டாவது புதன் கிழமைகளில் கூடுதல் கண்காணிப்பாளர் தலமையில் நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முகாமில் இதுவரை 60 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காணப்படும். ஏற்கனவே, காவல் நிலையத்தில் அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களையும் புது மனுக்களாக சேர்த்து, அந்த மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.