சேலம்: சேலம் மாவட்டம் ஸ்ரீ ராஜகணபதி கோயில் அருகே நூற்றாண்டு கால புகழ்பெற்ற வ.உ.சி. மலரங்காடி செயல்பட்டு வந்தது. இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சி சார்பில், மலரங்காடி போன்ற பல கடைகள் வைக்கும் வகையில் அப்பகுதியில் புதிய கட்டடம் எழுப்பப்பட்டது.
முன்னதாக முறையான திட்டமிடல் இல்லாமல் அப்பகுதியில் செயல்பட்டு வந்த மலர் அங்காடிகள், காய்கறி மற்றும் இறைச்சிக் கடைகள் மீண்டும் புதிய கட்டடத்தில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது எந்தெந்த இடங்களில் கடைகளை ஒதுக்குவது என்று மாநகராட்சிக்கு தற்போது பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தரைதளம் உள்பட மூன்று தளங்களையும் தலா ஒருவர் வீதம் என மூன்று பேர் ரூபாய் 10 கோடிக்கு ஒப்பந்தம் செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இடங்களை ஒதுக்குவதில் மாநகராட்சிக்குச் சிக்கல் எழுந்துள்ளது.
இதனிடையில், வளாகத்திற்கு விற்பனைக்கு வந்து செல்லும் பொருட்களுக்கு ஏற்றவாறு கட்டணத்தை வசூலிக்க மட்டுமே குத்தகை தாரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை குத்தகை தாரர்கள் கூறு போட்டு விற்பனை செய்வதாக தற்போது, திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே வ.உ.சி அங்காடியில் கடை வைத்து நடத்தி வந்த 140 குறு, சிறு வியாபாரிகளுக்குப் பதிலாக வியாபாரிகள் அல்லாத நபர்களுக்குக் கடைகளைக் கூறு போட்டு விற்பனை செய்வதாக வியாபாரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.