கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தூய்மைப் பணியாளர்கள் தினமும் ஈடுபட்டு உள்ளனர்.
அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு உதவிகள் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சேலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இரண்டு ஆயிரத்து 500 பேருக்கு, மாநகராட்சி சார்பில் 16 வகை மளிகைப் பொருள்கள் இன்று தனியார் பங்களிப்புடன் வழங்கப்பட்டது.
சேலம் தொங்கும் பூங்கா மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், தூய்மைப் பணியாளர்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கினார் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மிகவும் இக்கட்டான சூழலில் களமிறங்கி சேலத்தை தூய்மையாக பராமரித்து வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் தொண்டுள்ளம் கொண்ட சமூக ஆர்வலர்களின் பங்களிப்புடன், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 16 வகை மளிகைப் பொருள்கள் அடங்கிய பைகள் ஒவ்வொரு தூய்மைப் பணியாளருக்கும் இன்று வழங்கப்பட்டுள்ளது .