சேலம்:சேலத்தில் காங்கிரஸ் கட்சி பல பிரிவுகளாக பிரிந்து இருக்கிறது. இந்த நிலையில், அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பொன்னம்மாப்பேட்டை பகுதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திருச்சி வேலுச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டம் குறித்து சேலம் மாநகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. மேடை அமைத்து பல கிலோ மீட்டர் தொலைவிற்கு காங்கிரஸ் கொடிகள் கட்டப்பட்டு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வந்தன.
இந்தச் சூழலில் இந்த பொதுக்கூட்டத்திற்கு வர இயலாது என திருச்சி வேலுச்சாமி ஏற்பாட்டாளர்களிடம் கூறியுள்ளார். இதனால் பொதுக்கூட்டம் நிறுத்தப்பட்டது. திருச்சி வேலுச்சாமி வர மறுத்ததற்கு காரணம், சேலம் மாநகர மாவட்டத் தலைவராக உள்ள பாஸ்கர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கே.வீ. தங்கபாலுவும்தான் என்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். உட்கட்சிப் பூசல் காரணமாகவே இந்தச் செயலை அவர்கள் செய்துள்ளதாவும் குற்றம்சாட்டினர்.