தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைநீர் சேமிப்பு தொடர்பாக அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை - எடப்பாடி பழனிசாமி

சேலம்: மழைநீர் சேமிப்பு தொடர்பாக பல்வேறு துறைகளின் அலுவலர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

சி எம்

By

Published : Jun 9, 2019, 4:59 PM IST

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த இரண்டு நாட்களாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மூன்றாவது நாளான இன்றைய தினம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஆய்வு மாளிகை அனைத்துத் துறை உயர் அலுவலர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.

இதில், தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் கோடைகால குடிநீர் தட்டுப்பாடு எந்த வகையில் எதிர்கொள்ளப்படுகிறது, அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்த அவர், தற்போது கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள சூழ்நிலையில் அங்கு பெய்யும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால், தண்ணீரை முறையாக சேமித்து வைப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டார்.

அதேபோல், தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், முன்னதாகவே நீர்நிலைகள், நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி, அதனை தூர்வாரி மழைநீரை சேமிப்பது தொடர்பாக அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளின் நிலவரம் குறித்தும் அரசு அலுவலர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

மழைநீர் சேமிப்பு தொடர்பாக அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

இந்த ஆய்வுக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி, மாநகராட்சி ஆணையர் சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாநகர காவல் ஆணையர் சங்கர் உட்பட பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பொதுமக்களை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனுக்களை பெற்றார்.

ABOUT THE AUTHOR

...view details