சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயப் பெருவிழா மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்தபோதே இதனைத் தெரிவித்தார்.
இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், 'காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும். இதுதொடர்பாக சிறப்புச் சட்டம் கொண்டு வரப்படும். விவசாயிகள் படும் துயரத்தை கவனத்தில் கொண்டு இதை நான் அறிவிக்கிறேன். காவிரி டெல்டாவில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு கொண்டு வராது.
காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதியை அஇஅதிமுக தரவில்லை. இன்று நாடகமாடும் திமுக தான் அதற்கான ஒப்பந்தத்தைப் போட்டது. இந்த ஒப்பந்தம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. அஇஅதிமுக தலைமையிலான தமிழ்நாடு அரசைப் பற்றியும், அமைச்சர்களைப் பற்றியும் திமுகவினர் பொய் பரப்புரைகளை செய்து வருகின்றனர். அவர்கள் என்னதான் பரப்புரை செய்தாலும் அஇஅதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது' எனத் தெரிவித்துக்கொண்டார்.