சேலம்:நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் நகராட்சிக்கு நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 249 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் போலிக் ஊட்டச்சத்துகள் கொண்ட மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஒருவருக்கு ஒரு மாத்திரை வீதம் வழங்கப்பட்ட நிலையில் அந்த பள்ளி மாணவிகள் சிலருக்கு கூடுதலாக மாத்திரைகள் கிடைத்துள்ளன. அப்போது, யார் அதிகமாக மாத்திரை உட்கொள்வது என்று மாணவிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் அதிக எண்ணிக்கையிலான மாத்திரைகளை சாப்பிட்ட 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவர், 7ஆம் வகுப்பு மாணவர் மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக மாணவ, மாணவிகளை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் ஆசிரியர்கள் சேர்த்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மாணவிகள் உடல்நிலை மோசமானதால் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் தனியார் காட்டேஜில் ஊழியராக பணிபுரிந்து வந்த ஊட்டியை சேர்ந்த முகமது சலீம் என்பவரது மகள் ஜெய்பா பாத்திமா(13) என்ற 8ஆம் வகுப்பு மாணவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டார்.