சேலம்:பாஜக முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா இன்று (நவ.20) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "திருமாவளவன் எல்லை மீறி பேசி வருகிறார். எல்லை மீறுவதை கண்டிக்க வேண்டியது நடவடிக்கை எடுக்க வேண்டியது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுதான் திராவிட மாடலா? தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் நடைபெறும் ஊழல்களை பகிரங்கமாக விசாரிக்க வேண்டும், விசாரணை நடத்தப்படும்போது, குறிப்பிட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்போதுதான், அந்த விசாரணை நேர்மையாக நடைபெறும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பால் விலையேற்றம் குறித்த கேள்விக்கு பச்சை பொய் சொல்கின்றது தமிழ்நாடு அரசு. பால் உற்பத்தியாளர்களுக்கு மூன்று ரூபாய் உயர்த்தி வழங்கிவிட்டு, 12 ரூபாய் லிட்டருக்கு உயர்த்தி உள்ளது. இதனால், சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்களை ஆறு மாதமாவது மாடு மேய்க்க வைக்கவேண்டும்" என்றார்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்த ஹெச்.ராஜா, திமுக ஆட்சியில் தகுதியற்றவர்கள் அமைச்சர்களாக உள்ளதாகவும் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 10 சதவீத இடஒதுக்கீட்டு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் - திருமாவளவன்