சேலத்தில் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு சேலம்:தமிழ்நாடுபாஜக தலைவர் அண்ணாமலை, சேலம் மாவட்டத்தில் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை இன்று (ஜன.3) தொடங்கினார். முன்னதாக, சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் உள்ள சேலம் மக்களவைத் தொகுதி அலுவலகத்தை அண்ணாமலை திறந்து வைத்தார்.
பின்னர், அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பிரதமர் மோடிக்கு பிரமாண்டமான முறையில் தமிழகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் வருகையால் தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
அவர் மீது எவ்வித முகாந்திரமும் இல்லாமல், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. பதிவாளர் நியமனம் தொடர்பாக எழுந்த பிரச்னை காரணமாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொன்முடிதான் காரணம். பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக சார்பாக கடிதம் எழுத உள்ளோம்.
தமிழக டிஜிபி, சேலம் மாநகர காவல் ஆணையர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆத்தூரில் இரண்டு விவசாயிகள் நிலத்திற்கு அமலாக்கத்துறை சார்பாக சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து, அமலாக்கத்துறைதான் விளக்கம் அளிக்க வேண்டும். விவசாயிகள் மீது ஏற்கனவே வனவிலங்கை வேட்டையாடிய வழக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. விவசாயிகள் குற்றம் செய்யவில்லை என்றால், அவர்களுக்குத்தான் நான் ஆதரவாக நிற்பேன்.
விவசாயிகளின் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை, வருங்காலங்களில் தவறை திருத்திக் கொள்ள வேண்டும். சென்னை மழை வெள்ள நிவாரணத்தொகை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கேள்வி எழுந்துள்ளது. கையில் பணத்தை கொடுப்பதே முறைகேடு செய்வதற்குத்தான். பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கு நாடகம் நடத்தி, பொதுமக்களிடம் பணத்தை வழங்குவார்” என்றார். பேட்டியின்போது பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சேலம் காவல்துறை ஆணையர் தமிழக அரசுடன் இணைந்து செயல்படுகிறார் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஜன.9 முதல் போக்குவரத்து தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு!